அதிகாலைகள் அற்புதமானவை…

ஆதவன் எழுப்பி விட
அரைக்கண் திறக்கும், அழகு
ஆகாயம்!

கரைக் காதலியைக்
காண அலையாய் அலையும்
செங்கடல்

பனித்துளி சொட்டக் குளித்த,
புல்வெளிக்குத் தலை துவட்டும்
பகலவன்!

காலங்காலமாய் மரக்கடைகளில்
கூவிக் கூவிக் குரல் விற்கும்,
குயில்!

தண்ணீரின் அழுத்தத் தடைகளை,
தண்டுகளால் சுமந்து,
தலை தூக்கும்
தாமரை!

களத்து மேட்டில் காலாற நடந்து,
கதிரவன் பல்துலக்கும்,
கால்வாய்!

கிளைகளிலுள்ள மலர்களைக்
கிள்ளிச் செல்லும்,
காற்று

புல்லினமும் புள்ளினமும் பூரிக்கப்
புன்னகை மலரும்
பூக்கள்!

புதியதொரு பக்கத்தை
புரட்டிய படி,
நாள்காட்டி திருப்பும்
புவி!

அதிகாலைகள் அற்புதமானவை!

நதிநேசன் கணேஷ்