வெளிச்சம்
அண்டத்தின் பால்வழிகள் அடையாள வெளிச்சம்
கண்டங்கள் தாண்டிடவே கடல்காட்டும் வெளிச்சம்
வண்டுகளும் கள்ளுண்ண வண்ணப்பூ வெளிச்சம்
தொண்டுள்ளம் உள்ளவரை தொலையாது வெளிச்சம்
வானகத்தில் விண்மீன்கள் வழிகாட்டும் வெளிச்சம்
கானகத்தில் மின்மினிகள் கடைபோடும் வெளிச்சம்
ஏனென்று கேட்பவர்க்கு எங்கெங்கும் வெளிச்சம்
நானென்ற ஆணவமும் நலிவதுவே வெளிச்சம்
விரிகின்ற மலருக்கு விண்ணொளியே வெளிச்சம்
எரிகின்ற விளக்கிற்கு எண்ணெய்தான் வெளிச்சம்
சரியான திறமைக்குச் சறுக்கல்கள் வெளிச்சம்
புரியாத பொருளுக்குப் புதினங்கள் வெளிச்சம்
நதிசெல்லும் பாதைக்கு நகரங்கள் வெளிச்சம்
அதிமதுரத் தமிழுக்கு ழ’கரந்தான் வெளிச்சம்
விதியாளும் வாழ்வினிலே விடைகாணல் வெளிச்சம்
கதியின்றிக் கதறுகையில் கடவுள்தான் வெளிச்சம்
நதிநேசன் கணேஷ்
www.nadhinesan.com