அம்மா என்னும் அகரம்
ஆயிரம் உறவுகள்
அகிலம் கண்டாலும்
ஆதாரச் சுருதியாய்
ஆரம்பக் குருதியாய்..
அமையும் உயிரொன்று
உண்டு
அம்மா எனும்
பெயர் கொண்டு
காசுக்கு நில்லாது
காரணம் இல்லாது
அமைதி நிரப்பியாய்
அன்புச் சுரப்பியாய்
அணைக்கும் உயிரொன்று
உண்டு
அம்மா எனும்
பெயர் கொண்டு
வாலிபம் வந்தாலும்
வயதைம்ப தானாலும்
கண்ணு’ என்றுன்னை
கருணையாய் வாஞ்சையாய்
அழைக்க உயிரொன்று
உண்டு
அம்மா எனும்
பெயர் கொண்டு
படித்தால் தான் சோறென்று
பதிவேற்றிப் போனாலும்
முடியாது படியேறி
முடிகோதிப் பரிமாறும்
பரிசுத்த உயிரொன்று உண்டு
அம்மா எனும் பெயர் கொண்டு
வெட்டியாய் நின்றாலும்
வெள்ளியாய்த் தந்தாலும்
பொன்னெனப் பாசத்தைப்
பொழிகின்ற வானக்கரு
முகிலன்ன உயிரொன்று உண்டு
அம்மா எனும் பெயர் கொண்டு
இறைவனே பூமிக்கு
இறங்கித் தான் வந்தாலும்
உண்டீரா என்றவரை
உண்மையாய் விசாரிக்க
மாசற்ற மனமொன்று உண்டு
அம்மா எனும் பெயர் கொண்டு!
நீ,
தவிக்கையில் தளர்ந்து
சிரிக்கையில் சிலிர்த்து
உயர்கையில் உவந்து
அழுகையில் அணைக்கும்
அழகான உயிரொன்று
உண்டு
அம்மா எனும்
பெயர் கொண்டு
கணவனிடம் திண்டாடி
கடவுளிடம் மன்றாடி
காலமும் உன் நலம்
கருதிடப் பூமியில்,
கடவுள் துகளொன்று
உண்டு
அம்மா எனும்
பெயர் கொண்டு
அன்னையர்
அனைவருக்கும்,
என்
அன்பே
காணிக்கை!
நதிநேசன் கணேஷ்