அட!
என்ன செய்து விடும் தோல்வி?
துவண்டுத் துயரில் மூழ்காதே!
மீண்டும் மூச்சிழுத்து முயன்று பார்..
வழிகின்ற வியர்வையால் படகோட்டு!
வழி சொல்லும் அறிவினைத் துடுப்பாக்கு
களைப்பாற வானம் பார்!
கடந்து செல்லும் களிப்புக் கப்பல்களின்
சொகுசுக்கு ஏங்கிச் சோம்பி விடாதே!
தாகம் தவித்தால் அலுப்பை அருந்து
முயற்சிப் பசிக்குப் பயிற்சி விருந்து
அயர்வு நோய்க்கு வியர்வை மருந்து!
கரையில்லாக் கடலும் இல்லை
விடையில்லாத் தடையும் இல்லை
புரண்டு படுக்கும் அலைகளிடம்
புரிந்து கொள், தோல்வியும், வெற்றியும்…
ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்
அண்ணன் தம்பிகள்,அலையாடு…
விதியுடன் விளையாடு..
அதோ தெரியும்,
கரையின் வெளிச்சப் புள்ளிகள்
கண்டு வெற்றிக் களிப்புறாதே..!
மெல்ல, மௌனமாய், முறுவலிடு..
எதையும்….
கடந்து செல்லப் பழகு..
கடினமே இல்லை தோல்வி…
நதிநேசன்