முடியும் ..உன்னால் எதுவும் முடியும்
முன்பல் விழுந்தும் முனைந்து சிரித்தால்,
மூச்சின் மௌன மொழியைப் புரிந்தால்
மூளும் சினத்தை மூடத் தெரிந்தால்
முடியும்..உன்னால் எதுவும் முடியும்
விடியும் முன்னர் விழித்துப் பார்த்தால்
வெறுப்பு விடுத்து விருப்பம் கோர்த்தால்
விழையும் உழைப்பு வியர்வை சேர்த்தால்
முடியும்…உன்னால் எதுவும் முடியும்
துரத்தும் விதியைத் தூர எறிந்தால்
தோல்வித் துளியைத் துடைக்க முடிந்தால்
துக்கம் விலக்கித் தூங்கத் தெரிந்தால்
முடியும்…உன்னால் எதுவும் முடியும்
கடிக்கும் வலிகள் கடக்கப் படித்தால்
இடியை மனதில் இசையாய் வடித்தால்
அடிக்கும் நபரை அணைக்கத் துடித்தால்
முடியும்…உன்னால் எதுவும் முடியும்
செல்வம் இன்றிச் செழிக்கத் தெரிந்தால்
எல்லாம் பகிரும் எண்ணம் விரிந்தால்
நில்லாப் புகழின் நெறியும் புரிந்தால்
முடியும்…உன்னால் எதுவும் முடியும்