வெந்ததைத் தின்று விதிவழிச் சென்றிட,
வந்து கிடப்பது வாழ்வில்லை-விந்தென,
முந்திய நாளாய் முயலத் துவங்கிடும்
பந்தய வாழ்விது பார்
அந்திப் பொழுதாய் அனைத்து மிருண்டாலும்,
சந்தி சிரித்துஞ் சரிவில்லை- சிந்தும்,
வியர்வைத் துளியில் விளையும் பயிரின்
உயர்வினை மெச்சிடும் ஊர்