இளைய நிலா வழிகிறது
—————————— ———–
டிக்..டிக்.. டிக் என்னும்,
கடிகாரச் சத்தத்தின் வழியே
துளித்துளியாய்,
என்னிலிருந்து
மெல்ல மெல்ல
மறைந்து கொண்டிருக்கிறது,
இளமை..
மட்டையைப் பிடிக்கக்
குதித்துக் கிளம்பி
ஓடிய கால்களில்,
வலி மட்டுமே இன்று
ஓடிக் கொண்டிருக்கிறது..
காதல் நிரப்பிக் களித்த
கருவிழிகள், இன்று மூக்குக்
கண்ணாடிக்குள் மறைகின்றன,
வெள்ளெழுத்து வெட்கத்தால்…
இதுவரை யார்க்கும்
தலைசாய்க்காத செவிகள்,
செருக்குக் குறைத்தன,
காது மடல் நரைகள்
கண்டு..
இளைய நிலா பொழியுதென
இருந்தவனின் இறுமாப்பை,
இளக்கியது..
இனிப்புச் சேராத
இன்றைய காப்பி..
நாளைய கனவுகளில்
நயந்திருந்தவனிடம்,
நடுவயதை நடுக்கங்களை
நயமாய்ச் சொன்னது, சாய்வு
நாற்காலி..
வயிற்றில் சரிந்த தொப்பையும்
மனத்தில் சரியாத குப்பையும்,
என்னைப் புரட்டி எடுக்க,..
பார்க்கச் சகிக்காது,
புலம்பியது… என்னை
நாற்பத்துச் சொச்ச
வருடங்களாய்ப் பார்க்கும்
என் வீட்டுக் கண்ணாடி
அகம் தான் அழகென
ஆயிரம் சப்பைக் கட்டினாலும்
முடியும் இளமையைக் காட்டியது
முடிவில்லா நெற்றி..
வாழ்வின் பொருள்,
விடியத் தொடங்கும்
அப்பொழுதிலும்,
இளைமையின் இருட்டிலிருந்து
கரு’மை’ எடுத்து பூசிக் கொண்டது,
நரைக்கத் தொடங்கிய,..
என் வானம்.
நதிநேசன்