வெற்றி நிரப்பு
——————
நெஞ்சே எழு,
வீதி சொல்லும் விதியென்று…
நம்பாதே !
முடிச்சை அவிழ்த்தால்
முடியாத வினையில்லை
முயன்று பார்!
பாறைகளில் மோதி
காயப்படக் கண்ணாடியல்ல,
நீ காற்று!
பட்டுத் தெரிந்து, புகுந்து புறப்படு.
உனக்கேது வேலி !
இனி நடக்காது,
என்னும்
சொல்லை செல்களிலிருந்து
சுழற்றி எறி…
பாவக்காய் கூட கசந்து
பெருமை பெறும்..சுய
பரிதாபம், பச்சாதாபம்
என்றும் பரிசு பெறாது!
தீயைத் தொடு , சுடட்டும்..
பனிப் பாறையாகாதே,
சுட்ட செங்கல் தான்
வீடு கட்ட உதவும்…
என்னை விட
உயர்ந்தவன்
யாருமில்லையெனும் சில
தென்னைகள் கண்டு
தேம்பிடாதே ..!
முறித்தாலும் வளைகின்ற
மூங்கிலாய் இரு..
உள் வாங்கும்
மூச்சை குழல் இசையாக்கு !
நேற்று நடந்த
நல்லதை நினை
இன்று இயங்க
தயார்படுத்து உனை
நாளை வரட்டும்,
நம்பிக்கையில் நனை !
வெற்றிடத்தை உழைத்து,
வியர்வையால் நிரப்பு..
வெற்றி இடம் உனக்கே!
வியாழன் உதிக்க,
விடியட்டும் உள்ளம்!
நதிநேசன்