கண்டெடுத்த கத்திரிக்காய்
கருகிடாது சுட்டெடுத்து,
உண்டுபார்த்து சப்புக் கட்டி
உப்புக்காரம் மிளகுதூவி,
துண்டமிட்டு துவைந்திடாமல்
துல்லியமாய் பொறியலாக்கி
அண்டாவில் எண்ணையிட்டு
அப்பளத்தை பொறித்திட்டு,
வெண்டைக் காய் பிஞ்சுகளை
வெட்டித் துண்டாய் வேகவைத்து
சுண்ட வற்றும் சாம்பாரில்
சுதந்திரத் தான் ஆக்கி
வண்டலான நெய்யில் கடுகு
வேப்பிலையும் தாளித்து
குண்டான்கள் குட்டி போட்ட
குவளையிலே ஊற்றி விட்டு
விண்ட தக்காளி மல்லி
வீறுகொண்ட ரசம் முடித்து
பண்டத்திற்கு போண்டாவும்
பதார்த்தமாய் போளி செய்து
அண்டை வீட்டு காரனெல்லாம்
அடடா வென்று முகர்ந்து பார்க்க…
எம்பி எம்பி எட்டிப் பார்த்தேன்
என்னவளின் சமையல் அறையில்
வெம்பிக் கிடக்காது வேலையின்
வேகமென்ன, வாகு என்ன !!
தும்பியாய் திரிந்தவளை
துரத்திக் கேட்டேன் புரியவில்லை- அவள்
தம்பி வரும் நாளென்று
தலைக்கு மேலே காட்டியது…