பகலவன் (வான்) பா
உதிப்பான், உலகில் ஒளிர்வான் மிளிர்வான்
பதிப்பான், பனியைப் பறிப்பான் பகிர்வான்
குதிப்பான், நதியில் குளிப்பான் குளிர்வான்
மதிப்பான், முகிலில் மறைவான் தெரிவான்!
சுடர்வான், மதியம் சுடுவான் தகிப்பான்
தொடர்வான், புவியைத் தொடுவான் மகிழ்வான்
அடர்வான், கதிராய் அமர்வான் அளப்பான்
படர்வான், பகலின் பகவான் பலவான்!
விடிவான், விளக்காய் விரிவான் வளர்வான்
முடிவான், இரவை முடிப்பான் முழிப்பான்
படிவான், பசும்பொன் படுவான் படிப்பான்
வடிவான், அழகில் வசிப்பான் வடிப்பான்
இருள்வான் அகல, இசைவான் இமைப்பான்
அருள்வான் பகலும், அனலான் அமைப்பான்
உருள்வான் உலகில், உலர்வான் உறைவான்
மருள்வான் மனதில், மலர்வான் வெயிலான்