ஊரில் உற்றார்
உறக்கம் பெற்றிட,
இங்கு, நானென்
உறக்கம் விற்றேன்…
இமைக் கதவுகள்
மூடாது உழைப்பதால்,
வெயில் மழையிலும்
வேனற் காற்றிலும்
நனைந்து வலிக்கின்றன..
என் திறந்த கண்கள்…
விசா எடுத்து வந்த பின்னே,
விசாரிக்கக் கூட ஆளின்றி
காசுக்காகத் தூசிலும், மாசிலும்
கலந்து, களிக்க மறந்தன..
என் கால்கள்…
‘வெள்ளி’ யை எண்ணி,
என் சனியும், ஞாயிறும் கூட
தூக்கம் தொலைத்தன..
ஓய்வினை வெட்டி
வேலையாய் விதைத்து,
கனவுகளைச் செடியாக்கிக்
பணம் பூக்கப்
பரிதவிக்கின்றன..
என் பாதங்கள்..
அப்பாலிருக்கும்
அன்னையின் குரல் நெகிழ்வில்,
விசும்பும் வீட்டாளின்
வேதனைக் காதலில்,
நனைந்த
தொலைபேசிக்
காசு அட்டையை
உலர்த்தியே,
கழிந்தன இரவுகள்
கண்கள் உலராமல்…
உடன் பிறந்த நல்லாளின்
திருமணக் கடன் பாரம்
இமைகளில் சுமையென
இறங்குகையில்,
உறங்கிடுமோ என் கண்கள்?
ஊரில்,
மனதைத் தொட்ட
மனிதர்களின் மரணத்தையும்
மனம்விட்டுப் பழகிய
உற்ற நண்பனின்
திருமண மகிழ்ச்சியையும்,
எனக்குப் பிறந்த என் வாரிசைக் கூட,
வாட்ஸப்பில் கொஞ்சும்
வாஞ்சையையும்,
இரண்டரை நிமிடத்தில்
இதயம் இறுகிடக்
கற்றுக் கொடுத்த…
அந்தக்,
காசுப் பிசாசைத் தேடி
வேலை வேதாளத்தைத்
தன் தோளில் போட்டுக் கொண்டு
மீண்டும் கிளம்பினான்..
தூக்கத்தைத் தொலைத்த
வெளி நாட்டு பணியாளன் எனும்
விக்கிரமன்…!
நதிநேசன்