மனதில் முளைக்கும் மலர்களின் புன்னகையே
மன்றம் திளைக்கும் மகளெனும் மாதவமே
மண்ணில் விளைந்த மார்கழித் தேவதையே
மகளே, எங்கள் மகிழ்ச்சியின் சூத்திரமே!
அப்பனென அற்பனெனை ஆக்கிய அற்புதமே
எப்புறமும் எங்களுளம் சூழ்ந்திடும் பொற்பதமே
முப்பத்து முக்கோடி இன்பமுன் சொற்பொருளே
கப்பமது முத்தமென கட்டிடு எம்மகளே!
அன்னையின் ஆருயிரே அப்பனின் ஓருயிரே
நின்னையே கதியென்று நெகிந்திடும் என்னுளமே
முன்னைய ஜன்மத்தில் பண்ணிய புண்ணியமே
என்னையும் எழவைத்த, ஏந்திழையே என்வரமே!
நிகழ வைப்பவளே, நீவிவிடும் மயிலறகே
அகமே அஞ்சுகமே ஆனந்தத் தீஞ்சுவையே
முகத்தின் முறுவலிலே மூவுலகம் வெல்பவளே
மகளே, என்வரமே, மாதவளே, வாழியவே!