வெளிச்சத் தேவைகள்

எத்தனை வலிகள் இடர்கள் தடைகள்
ஏக்கத் தவிப்புக் களோ
அத்தனைத் துயரும் அடியோ டொழிக்க
ஆக்கம் எதுமு ளதோ
நித்தமும் தோன்றி நெருடும் கவலை
நீக்கவும் வழியு ளதோ
சித்தமும் தெளியச் சீர்தரும் ஞானமே
சீக்கிரம் வந்தி டுவாய்

தொட்ட காயமும் தொடரும் மாயமும்
தோற்றப் படிமங் களோ
பட்டுத் தெரிந்தும் பழகா மாற்றமும்
பெற்ற பாடங் களோ
விட்டுக் கொடுத்து விலகத் தெரிந்தால்
வெற்றென் றாகி டுமோ
எட்டுத் திக்கும் ஏகிடும் சோதியே
எற்றா தேந்திடு வாய்!

வெற்றி மிதப்பும் தோல்வித் துடிப்பும்
வெளிச்சமும் பொய்யொ ளியோ
பற்றும் ஆசையும் பழகும் நேசமும்
பளிச்சிடும் குமிழி களோ
கற்றுக் கறந்த காசின் கருணைக்
களிப்பினைத் தந்தி டுமோ
ஒற்றைப் பொருளே உலகத் தருளே
ஒளிதனைக் காட்டி டுவாய்!

நதிநேசன்