வானம் எனக்கொரு போதி மரம்

முகில் கூட்டங்கள் மிரட்டி அலைகையில்,
மூடிக்கிடக்கும் சில நேரம்…ஆயினும்
முடிவதில்லை வானம்…
முயன்று திறக்கிறது மௌனமாய்..

இடிமின்னல் அடித்து இடர்பல இழைக்கையில்,
இசைந்து பணிகிறது சில நேரம்..ஆயினும்
இறப்பதில்லை வானம்…
இயன்று எழுகிறது இயல்பாய்..

மழைத்துளி விழுந்து மேனி குளிர்கையில்
மருண்டு கிடக்கும் சில நேரம்…ஆயினும்
மடிவதில்லை வானம்..
மறுபடி மகிழ்கிறது மஞ்சளாய்…

புயல்வளி பீறிட்டு புலந்தனைப் பெயர்க்கையில்
புரண்டு படுக்கிறது சில நேரம்..ஆயினும்
புலம்புவதில்லை வானம்…
புதிதாய்ப் பிறக்கிறது பொன்னொளியாய்…

சிவப்பும் கருப்பென வண்ணந் தீட்டுகையில்,
சிலிர்த்துச் சகிக்கிறது சில நேரம்..ஆயினும்
சினந்து சீறுவதில்லை வானம்…
சிரித்து விரிகிறது சித்தரமாய்..

கதிரவன் கோபித்துக் கடுஞ்சூட்டால் எரிக்கையில்,
களைத்து வியர்க்கிறது சில நேரம்..ஆயினும்
கலங்கி விழுவதில்லை வானம்…
களிப்புடன் மலர்கிறது மாலையாய்…

மேற்கின் போர்வை மேனி சூழ்கையில்,
மெல்ல மயங்கிடும் சில நேரம்..ஆயினும்
மாண்டு விடுவதில்லை வானம்…
மீண்டும் முழிக்கிறது கிழக்காய்…