புதியதோர் ஆண்டில் புகு

————————-

உறுதியும் ஊக்கமும் உந்திடச் சென்றால்
மறுபடி வேலை மணக்கும்- பொறுத்துப்
பொதிகள் சுமக்கப் பொலிவுடன் இன்றுப்
புதியதோர் ஆண்டில் புகு

 

 

விடுமுறை நாட்கள் விரைவாய்க் கரையக்
கடும்பணிக் காலம் கனியும்- திடமாய்,
நதியென ஓடிட நம்பிக்கை கொண்டே
புதியதோர் ஆண்டில் புகு

 

 

சில்லென்ற காலைகள் சிற்றுண்டிச் சாலைகள்
நில்லெனச் செப்பிடும் நேசங்கள்-மெல்ல,
மதியினைத் தீட்டி மனதிடம் ஊட்டிப்
புதியதோர் ஆண்டில் புகு

 

நதிநேசன்