காலப் போக்கின் காதலத்து விடு
கடிகார முட்கள் குத்தாது உன்னை…

மாற்றத்தை மாலையிட்டு மணந்து பார்
ஏற்ற தாழ்வுகள் உன்னை ஏமாற்றாது!

எதிர்பார்ப்பினை எட்டி உதை
எதிர் நீச்சலை ஏணிப்படியாக்கு…

வரும் தீமைக்கு அஞ்சி வருந்தாது
வரவேற்று வாழையிலை போடு..!

குறிக்கோளோடு கட்டங்கள் நகர்த்து
கோள் கூறும் கட்டங்கள் நம்பாதே!

மெய் வருத்த,முயற்சி உளி கூலி தரும்;
தெய்வம் வடித்து, வணங்கவும் செய்!

அணுஅணுவாய் நம்பிக்கை அடை
ஆணவம் இல்லை, அனுபவமே எல்லை!

ஆரம்பம் ஆகட்டும் ஆனந்த முயற்சி…
பிள்ளையார் சுழியிடு, பிறந்திடு தினம்தினம்!

தடைகளை தாண்ட தைரியமாக
தொடைகளை தயார்படுத்து…

வினைகளை விளைத்திடு, வெற்றிக்கு
விழைந்திட்டால், நீயும் விநாயகனே…!