பரமனே பாரந்தாங்கி
————————–
தினந்தினம் அல்லல் கண்டு
திடுக்கிடும் நெஞ்சம் உண்டு
மனமது மருண்டு இங்கே
மயங்கிடும் பொழுதும் உண்டு
கனமென இதயம் கொண்டு
கலங்கிடும் உளமும் உண்டு
சினத்தினால் சுட்ட நாவும்
சிறுமையில் தவிப்ப துண்டு
கறைகளைக் கண்டு வானம்
கலங்கிடப் பார்த்த துண்டோ
முறையெனச் செய்யும் கடமை
முறிந்திடப் போவ துண்டோ
சிறைகளைப் போட்டு நீரே
சித்தமும் கலங்கு கின்றீர்
இறையருள் உணர்ந்து பாரீர்
இலகுவாய் பாரம் தீரும்
நதிநேசன் கணேஷ்