பட்டமே,

உனக்கும், எனக்கும் பெரிய
வித்தியாசம் இல்லை
நீ காற்றுக்குப் பறப்பவன்.
நான் காசுக்கு..

துறக்கத் துறக்கப்
பறக்குந் துயரென,
எனக்குப் போதிக்கும்,
ஆகாயப் புத்தன் நீ!

காற்றின் அலைகளைச்
சார்ந்தே நம் வாழ்வு!
இயற்கை வானிலும்
இணைய வானிலும்
உலாவும் பட்டதாரிகள்
நீயும், நானும்

அதிர்ஷக் காற்றை நம்பி
ஆகாயக் களம் இறங்கும்,
அசட்டுத்
துணிச்சல்காரர்கள்
நீயும், நானும்

விட்டும், விடாமலும்
நூல் கட்டிலும்
தாள் கட்டிலும்
ஆசைகளை
அடக்கியாளத்
தெரியாத இனம்
நீயும், நானும்

பட்டமே, உன்னை
ஏற்றி, இறக்கிப்,
பாடாய்ப் படுத்தும்
பொழுதுகளில்,
நானும் கூட உன்
கடவுளாகிறேன்!

நதிநேசன் கணேஷ்
http://www.Nadhinesan.com