ஞான வானம்
————-
கூரை மீதினில் கூடிய மேகமும்
கொட்டித் தீர்த்துக் கூற்றைச் சொன்னது
தாரை தாரையாய் தத்துவம் வழிந்து
ததும்பி நேரென் தலையில் விழுந்தது
காயப் பொய்களும் காட்சிப் பிழைகளும்
காலக் கணக்கில் கழியும் என்றது
மாய வாழ்வினில் மயங்கும் மனிதனே,
மரிக்கும் மெய்யை மறப்பாய் என்றது
பாசம் நேசமும் பழகிடும் வேசமும்
படுத்தும் பணமும் பறக்கும் என்றது
காசும் பொருளும் கண்வளர் ஆசையும்
காற்றில் வாசமாய்க் கரையும் என்றது
கற்றுக் கொடுத்துக் கலங்கிய வானம்
கண்ணில் நீலம் கழுவி நின்றது
பற்றை விட்டால் படரும் ஞானம்
பரவும் காற்றும் பாட்டாய்ச் சொன்னது
நதிநேசன்