எட்டிப் பிடிக்க ஏங்கும் போது,
எகிறிப் பறந்து தள்ளிப் போகும்
கிட்டக் கையில் கிடைக்கும் நேரம்
கிளம்பிப் போகக் கிழமை கேட்கும்
முட்டி உடைய முயன்று பெற்றும்
மூன்றே நாளில் முடிந்து போகும்
தொட்டுப் பார்த்துத் தொடரச் சொன்னால்
தொடுவான் போலே தூரஞ் செல்லும்

விட்டுத் தொலைக்க வீரம் இன்றி
விரைந்து திரிந்து விழைந்த போதும்
பட்டாம் பூச்சி பறத்தல் போலே
பார்வை தாண்டிப் பயணம் போகும்
தட்டுங் கதவின் தாழை நீக்கும்
தரணி முழுதுந் தன்னில் வைக்கும்
கட்டி யிதனைக் கணக்கில் வைத்தால்
கர்வங் கொண்டு காயங் கடிக்கும்

வெட்டிப் பயலே வெள்ளிப் பணமே
வெல்லத் துடிக்கும் வெறுந்தாள்க் கட்டே!
விட்டில் சாயும் விளக்கு வலையே
வீழ்த்தி வாழும் வெளிச்சப் பிழையே!
மிட்டாய்க் கசப்பே, மிளகா யினிப்பே
மின்னும் வலியே, மிரட்டும் ஒளியே
கொட்டித் தீர்ப்பாய் கொடையே, மழையே!
கொளுத்தும், காசுக் கோடை தணியேன்!