இதம் தேடும் இதயங்கள்
~~~~~~~~~~~~~~~~~~
நாளைகளின் எதிர்பார்ப்புகளில்
நனைகின்றன..
இன்றைய புன்னகைகள்…

இருக்கும் உளைச்சல்களில்
இறக்கின்றன…
உதட்டில் மலர்ந்த சிரிப்பூ’க்கள்

அதிகத் தேவை ஆரவாரங்களில்
அடங்குகின்றன….
அழகாய் அணிவகுத்த பற்கள்…

நோய்களை விரட்டத் துணையின்றி
நோகின்றன…..
விட்டுச் சிரிக்காத வாய்கள்

முகத்தில் வாழ்ந்த முகவரியை
மூடி மறைக்கின்றன
கழுத்தில் குடியேறிய நகைகள்

அகத்தில் படிந்த அகங்காரத்தால்
அழுக்காயின
அழகாய்த் தெரிந்த முகங்கள்

இயல்பாய் சிரித்த இதயங்களிலும்
மொய்க்கின்றன….
இயந்திரப் புன்னகை ‘ஸ்மைலீ’க்கள்

இடந்தோறும் புன்னகை தேடி,
இன்னமும் ஏங்குகின்றன…
இதந்தேடி வாடும், இதயங்கள்!

நதிநேசன்