ஆனந்தம் விளையாடும் பூமி
இது
ஆனந்தம் விளையாடும் பூமி
ஆகாயம்…புவிகாணும் சாமி!
புலரும் பொழுதின் புதினங்கள்
புவியின் காலைக் கடிதங்கள்
மலரும் இதழின் மதுரங்கள்
மகிழும் வண்டின் உளறல்கள்
உலரும் இலையின் உதிரங்கள்
உலவும் காற்றின் உருவங்கள்
அலரும் அரும்பும் படலங்கள்
அகில அழகின் நடனங்கள்
இது
ஆனந்தம் விளையாடும் பூமி
ஆகாயம்…புவிகாணும் சாமி!
குயிலின் இனிமைக் கூவல்கள்
குரலால் எழுப்பும் சேவல்கள்
பயிலும் இலையின் ஆடல்கள்
பனியில் புல்லின் பாடல்கள்
ஒயிலாய் நதியில் ஓடங்கள்
ஒளியின் பருவப் பாடங்கள்
வெயிலைத் தேடும் வானங்கள்
விடியல் பாடும் கானங்கள்..!
இது
ஆனந்தம் விளையாடும் பூமி
ஆகாயம்…புவிகாணும் சாமி!