அத்’தை’ மகள் வருகின்றாள்
மார்கழி மாதந் தாண்டி
மன்றத்தில் மகிழ்ச்சி பொங்க
பார்வையில் பச்சை படரப்
பயிராகிப் பருவம் வந்து
காரிருள் நீக்கி எங்கள்
கழனிக்குக் கருணை யாகி
வார்குழல் சூடி வயலில்
வந்திட்ட அத்’தை மகளே
மங்கிடும் உழவர் வாழ்வில்
மாறாத ஊக்கந் தருவாய்
தங்கிடும் தண்ணீர் தந்து
தரணிக்கு வரமாய் வருவாய்
எங்கிலும் எல்லோ ருக்கும்
ஏற்றங்கள் கிடைக்கச் செய்வாய்
பொங்கிடும் இன்பச் சோறாய்
பொன்னாகும் பெண்ணே, தையே!
பொங்கலோ பொங்கல்!