உழைப்பின் உருவம் உயர்வு
————————————————
(நேரிசை வெண்பா)

முயன்றால் எதுவும் முடியும், முனைந்து
பயின்றால் கடினம் பழகும்- இயன்று
விழையும் செயலில் விளையும் பயனும்,
உழைப்பின் உருவம் உயர்வு

தடைதருஞ் சோம்பல் தகர்த்து உழைக்க,
விடையென வந்திடும் வெற்றி- அடையெனப்
பெய்மழை பூமிக்குச் சீரெனில், மாந்தர்க்குச்
செய்யும் தொழிலே சிறப்பு

அயர்வினைக் கொன்றிட ஆக்கமா யோடும்
வியர்வையில் ஊக்கம் விளையும்- சுயமாய்த்
திறம்பட வேலை தெளிவுடன் செய்து
உறங்கிடத் தேவை உழைப்பு

நதிநேசன்